கர்நாடக காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் மேகதாது அணை கட்ட வாக்குறுதி. தமிழர்களுக்குச் செய்கின்ற பச்சைத் துரோகம்! – சீமான் கண்டனம்
கர்நாடகா சட்டமன்றத் தேர்தலுக்கான தனது தேர்தல் அறிக்கையில் காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கு ரூ.9,000 கோடி நிதி ஒதுக்குவதாக காங்கிரசு கட்சி அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்திற்குரியது. காவிரியின் குறுக்கே மேகதாது அணை கட்டும் காங்கிரசு கட்சியின் வாக்குறுதி தமிழ்நாட்டைப் பாலைவனமாக்கும் சூழ்ச்சியேயாகும்.
கர்நாடக மாநிலத்தை மாறி மாறி ஆண்ட காங்கிரசு – பாஜக இரு கட்சிகளும், ஆட்சி அதிகாரத்தைத் தக்க வைப்பதற்காக காவிரியின் குறுக்கே பல்வேறு அணைகளைக் கட்டி, காவிரி நீரைத் தடுத்து நிறுத்தி கடந்த 50 ஆண்டுகாலமாக தமிழ்நாட்டு விவசாயிகளின் வயிற்றில் அடிக்கும் கொடுமைகளைப் புரிந்தன. கடந்த 5 ஆண்டுகாலமாக கர்நாடக மாநிலத்தை ஆண்ட பாஜக, மேகதாது அணை கட்ட பல்வேறு முயற்சிகளை எடுத்து, தமிழர்களுக்கு எதிரான அதே துரோக வரலாற்றைத் தொடர்ந்தது. அதன் அடுத்த கட்டமாக, தற்போது நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றிப்பெற்று ஆட்சி அதிகாரத்தில் அமர்வதற்கு முன்பாகவே மேகதாது அணைகட்ட ரூ.9,000 கோடிகளை ஒதுக்குவதாக காங்கிரசு கட்சியின் தேர்தல் அறிக்கையிலேயே அறிவித்துள்ளது, இந்தியக் கட்சிகள் எப்போதும் தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் எதிராகவே செயல்படும் என்பதையே மீண்டும் ஒருமுறை நிறுவுகிறது.
மேகதாது அணைக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்குகள் உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், தீர்ப்பு வருவதற்கு முன்பாகவே அணை கட்ட நிதி ஒதுக்கப்படும் என்ற காங்கிரசு கட்சியின் அறிவிப்பு அரசியலைப்புச் சட்டத்திற்கு எதிரானது மட்டுமின்றி, இந்திய கூட்டாட்சி தத்துவத்தையே கேலிக்கூத்தாக்கும் செயலாகும். இந்திய கட்சிகளின் இத்தகைய ஒரு பக்கச் சார்பான நடவடிக்கைகள், நாங்கள் இந்த நாட்டின் குடிமக்கள் அல்லர் என்ற உணர்வினை ஒவ்வொரு தமிழரின் உள்ளத்திலும் வெடித்தெழவே வழிவகுக்கும். இதுதான் இந்தியாவின் ஒற்றுமையை காங்கிரசு கட்சி கட்டி காப்பாற்றுகின்ற ஆக்கப்பூர்வமான நடவடிக்கையா? இவற்றையெல்லாம் அனுமதித்துவிட்டு இந்தியாவின் ஒற்றுமை குறித்துப் பேச ராகுல் காந்திக்கு என்ன தகுதி இருக்கிறது? என்ற கேள்வியும் எழுகிறது.
அதுமட்டுமின்றி, கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் காங்கிரசு கட்சியின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை வெற்றிபெற செய்யத் தேர்தல் பணிக்குழு அமைத்துப் பாடுபட வேண்டும் என்று கர்நாடக மாநில திமுகவினருக்கு அறிவுறுத்தி திமுக தலைமை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மேகதாது அணை கட்டுவதற்கான காங்கிரசு கட்சியின் தேர்தல் வாக்குறுதி திமுகவிற்கு தெரியுமா? தெரியாதா? ஆதரவு தெரிவிப்பதற்கு முன் மேகதாது அணையைக் கட்ட எந்த முயற்சியும் எடுக்கக்கூடாது என்ற உறுதிமொழியை காங்கிரசு கட்சியிடம் திமுக ஏன் பெறவில்லை? காங்கிரசு கட்சியின் வெற்றிக்குப் பாடுபடுவதன் மூலம் காவிரியில் மேகதாது அணை கட்ட திமுக மறைமுக ஆதரவு அளிப்பது தமிழ்நாட்டிற்குச் செய்கின்ற பச்சைத் துரோகமாகும்.
ஆகவே, மேகதாது அணைகட்ட ரூ.9000 கோடிகளை ஒதுக்கும் தேர்தல் வாக்குறுதியை காங்கிரசு கட்சி உடனடியாகத் திரும்பப்பெற வேண்டுமென வலியுறுத்துகிறேன். அவ்வாறு திரும்பப்பெறவில்லை எனில் கர்நாடக தேர்தலில் காங்கிரசு கட்சியை ஆதரிக்கும் முடிவை திமுக கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக கேட்டுக்கொள்கிறேன்.
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி