வருகிற நாடாளுமன்றத் தேர்தலில் சீமானின் நாம் தமிழர் கட்சி "மைக்" சின்னத்தில் போட்டியிடுகிறது. கரும்பு விவசாயி சின்னத்தை நாம் தமிழர் கட்சி கேட்ட நிலையில், பாரதிய மக்கள் ஐக்கிய கட்சிக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கிவிட்டதால் நாம் தமிழர் கட்சிக்கு அதனை நாம் தமிழர் கட்சிக்கு ஒதுக்க முடியாது என தேர்தல் ஆணையம் கைவிரித்தது நாம் அனைவரும் அறிந்ததே.
நாம் தமிழர் தலைமை ஒருங்கிணைப்பாளர் செந்தமிழன் சீமான், தமது கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். அனைத்து நாம் தமிழர் தொண்டர்களும் மைக் சின்னத்தை மக்கள் மனதில் பதிய வைக்க தீவிரமாக பரப்புரை செய்து வருகின்றனர். இந்நிலையில் புது பிரச்சனை ஒன்று எழுந்துள்ளது. தேர்தல் வாக்குப்பதிவு வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு எந்திரங்களில் கட்சி சின்னம் வேட்பாளர் பெயர், புகைப்படம் ஆகியவை ஒட்டப்பட்டு வருகின்றன. இந்நிலையில், தேர்தல் ஆணையம், வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டியுள்ள மைக் சின்னம் வேறு மாதிரி இருப்பது தெரிய வருகிறது.
தேர்தல் ஆணையம் எங்களுக்கு கொடுத்த மைக் சின்னம் வேறு, வாக்குப்பதிவு எந்திரங்களில் தற்போது ஒட்டப்பட்டு வரும் மைக் சின்னம் வேறு என நாம் தமிழர் கட்சி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளித்துள்ளது. எங்களுக்கு கொடுத்தது ஆளி(ஆன் - ஆஃப் ஸ்விட்ச்) இல்லாத மைக் சின்னம், ஆனால், ஆளி உள்ள மைக் சின்னத்தை வாக்குப்பதிவு எந்திரங்களில் ஒட்டுகிறார்கள் என நாதகவினர் புகார் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அத்துடன் தங்களுக்கு ஒதுக்காத கரும்பு விவசாயி சின்னத்தை ராமநாதபுரம் உள்ளிட்ட சில தொகுதிகளில் போட்டியிடும் சுயேட்சைகளுக்கு ஒதுக்கியதுடன் அதை மைக் சின்னத்தின் அருகிலேயே வைத்திருப்பது நாம் தமிழரை வீழ்த்த எந்தளவு இந்த அதிகார மையம் வேலை செய்கிறது என்பதை காட்டுகிறது.