Jun 132023

அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசுப்பள்ளி பகுதிநேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை உடனடியாக வழங்க வேண்டும்! – சீமான் வலியுறுத்தல்

அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாதம் விடுமுறை என்பதால் ஊதியம் வழங்கப்படாது என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது வன்மையான கண்டனத்துக்குரியது. கடந்த 12 ஆண்டுகளாகக் குறைந்த சம்பளத்தில் அவர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு ஒரு மாத சம்பளம் வழங்கக்கூட அரசு மறுப்பது கொடுங்கோன்மையாகும்.

ஒரு மாத சம்பளம் கூட வழங்க வக்கற்ற தமிழ்நாடு அரசு எதற்காக அவர்களைப் பணியில் சேர்க்க வேண்டும்? பணி நிரந்தரம் செய்வோம் என்று ஏன் வாக்குறுதி அளித்து ஏமாற்ற வேண்டும்? குறைந்த ஊதியத்தில் இத்தனை ஆண்டுகளாக எதற்காக அவர்களின் உழைப்பினை உறிஞ்ச வேண்டும்? கள்ளச்சாராயம் காய்ச்சி விற்று நாட்டைக் கெடுத்தவரின் குடும்பத்திற்கு 50 ஆயிரம் கொடுத்துவிட்டு, குற்றவாளிக்கும் குடும்பம் உண்டுதானே? என்று விளக்கமளித்த திமுக அரசிற்கு, நாட்டின் எதிர்காலத் தலைமுறையை உருவாக்கிக் கொடுக்கும் ஆசிரியர் பெருமக்களுக்கு குடும்பங்கள் உள்ளது என்பது தெரியவில்லையா?

ஆகவே, அரசுப் பள்ளிகளில் பணியாற்றி வரும் பகுதி நேர ஆசிரியர்களுக்கு மே மாத ஊதியத்தை நிறுத்தாமல், உடனடியாக வழங்க வேண்டுமெனவும், அவர்கள் அனைவரையும் விரைந்து பணி நிரந்தரம் செய்ய வேண்டுமெனவும் தமிழ்நாடு அரசினை நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.