Jun 222023

தமிழினப்படுகொலை செய்த காங்கிரசு கட்சியைப்போல, மனிதகுல விரோதியான பாஜகவையும் புலம்பெயர் தமிழர்கள் புறக்கணிக்க வேண்டும்!

இலண்டன் மாநகருக்குப் பயணம் மேற்கொண்டுள்ள தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை அவர்கள் புலம்பெயர்ந்து வாழும் தமிழ் மக்களைச் சந்தித்து பேசுவதும்,  ஆதரவாக இருப்பது போலக் காட்டிக்கொள்வதும் தமிழர்களை நம்ப வைத்து ஏமாற்றும் மற்றுமொரு தந்திரமே அன்றி வேறில்லை.

ஈழத்தாயகத்தில் உரிமை கேட்டு போராடிய தமிழர்கள் சிங்கள இனவெறியர்களால் படுகொலை செய்யப்பட்ட காலகட்டத்திலும், அதன்பின் தமிழீழ தாயக விடுதலைப்போராட்டம் அமைதிவழிப் போராட்டமாக இருந்தபோதும், பின்னர் ஆயுதப்போராட்டமாகவும்  தொடர்ந்தபோதும், 2009 ஆம் ஆண்டு 2 இலட்சம் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டபோதும் என எந்தவொரு நெருக்கடிமிகு சூழலிலும் தமிழினத்திற்கு ஆதரவாகவோ, துணையாகவோ பாஜக இருந்ததில்லை என்பதே வரலாறு நெடுகிலும் நாம் கண்டுணர்ந்த உண்மையாகும். எல்லாவற்றிக்கும் மேலாக 30 ஆண்டுகாலப் போராட்டத்தின் பெருவெற்றியாக 2000ஆம் ஆண்டில் ஈழத்தாயகம் விடுதலை பெறக்கூடிய சூழல் உருவானபோது அதனை தலையிட்டுக் கெடுத்து பெருந்துரோகம் புரிந்தது வாஜ்பாய் தலைமையிலான அன்றைய பாஜக அரசுதான் என்பதை நாம் மறந்துவிடக்கூடாது.

ஈழத்தில் பல்லாயிரக்கணக்கான கோயில்கள் சிங்கள இனவெறி ராணுவத்தால் இடித்துத் தரைமட்டமாக்கப்பட்டபோது, இந்து கோயில்களை ஏன் இடிக்கிறீர்கள் என்று என்றைக்காவது பாஜக குரல் கொடுத்ததுண்டா? 2009இல் இலட்சக்கணக்கில் தமிழர்கள் துள்ளத் துடிக்கப் படுகொலை செய்யப்பட்டபோது அவர்கள் தமிழர்கள் என்பதற்காக இல்லையென்றாலும், அவர்களது  கோட்பாட்டின்படி படுகொலை செய்யப்படுவது இந்துக்கள் என்ற அடிப்படையிலாவது அவர்களை பாதுகாக்க முயற்சி எடுத்ததுண்டா?  காங்கிரசு அரசினை எதிர்த்து போராடித் தடுக்கும் உயரத்திலிருந்தும் தமிழினப் படுகொலையை தடுக்க என்ன போராட்டங்களை பாஜக முன்னெடுத்தது? ஒன்றுமில்லையே.

மாறாக, பாஜக மூத்த தலைவர்களில் ஒருவரான அத்வானி சிங்களர்கள் ராமனின் வாரிசுகள், தமிழர்கள் ராவணனின் வாரிசுகள் எனவே நாம் எப்போதும் சிங்களர்களுக்கு ஆதரவாகத்தான் இருக்க வேண்டும் என்று இந்திய நாடாளுமன்றத்திலேயே பேசி இன்றுவரை தமிழர் விரோத நிலைப்பாட்டையே தொடரும் பாஜக, திடீரென்று தற்போது தமிழர்கள் மேல் அக்கறை உள்ளவர்கள்போல் காட்டிக்கொள்வது முழுக்க முழுக்கத் தமிழர்களின் வாக்குகளைப் பறித்து தமிழர் நிலத்தை ஆளவேண்டும் என்ற ஒற்றை நோக்கம் மட்டுமேயாகும். 

மோடியின் முதல் பதவியேற்பு விழாவிற்கு, தமிழர்களின் கடும் எதிர்ப்பினையும் மீறி இனப்படுகொலையாளன் ராஜபக்சேவை சிறப்பு விருந்தினராக அழைத்ததையும், இலங்கை அதிபர் தேர்தலில் ராஜபக்சேவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மோடி பேசியதையும் தமிழர்கள் ஒருபோதும் மறந்துவிட  மாட்டார்கள். 2009 - இனப்படுகொலைக்குப் பிறகு தமிழர்கள் கடந்த 14 ஆண்டுகளாகப் பன்னாட்டு அரங்கில் நீதிகேட்டு, தொடர்ச்சியாகப் போராடி வரும் நிலையில், இனவெறி இலங்கை அரசுக்கு எதிராக உலக நாடுகளை ஒருங்கிணைக்க எந்த ஒரு முயற்சியாவது பாஜக அரசு எடுத்ததுண்டா? குறைந்தபட்சம் ஈழத்தில் நடைபெற்றது இனப்படுகொலைதான் என்பதை இப்போதாவது பாஜக  ஒப்புக்கொள்ளுமா? அதற்காக குரல் கொடுக்குமா?  மாறாக கனடா உள்ளிட்ட நாடுகள் இலங்கைக்கு எதிராகப் பலமுறை தீர்மானங்கள் கொண்டுவந்தபோதும், ஒவ்வொரு முறையும் தீர்மானத்தை எதிர்த்து இலங்கைக்கு ஆதரவாக வாக்களித்து தமிழர்களுக்கு பச்சைத்துரோகத்தைப் புரிந்தது மோடி அரசு. அத்தகைய கொடுங்கோன்மை பாஜக அரசிற்கு ஆதரவளிக்க வேண்டுமென அண்ணாமலை தமிழர்களிடம் கோருவது, வெட்டும் கோடாரியை ஆதரிக்க வேண்டுமென்று கைப்பிடி மரங்களிடம் கோருவதை போன்றதாகும்.  

உண்மையிலேயே பாஜக அரசிற்கு தமிழர்கள் மீதும், தமிழ் மொழியின் மீதும் அக்கறை இருக்குமாயின் 30 ஆண்டிற்கும் மேலாக இந்தியாவை தங்கள் தந்தையர் நாடென நம்பி வாழும் ஈழத்தமிழ் மக்களுக்கு குடியுரிமை வழங்க இன்றுவரை மறுத்துவருவது  ஏன்? அடிப்படை வசதிகள் ஏதுமின்றி கல்வி, உள்ளிட்ட மானுட உரிமைகள் அனைத்தும் மறுக்கப்பட்டு, கடும் கட்டுப்பாடுகளுடன், திறந்தவெளி சிறைச்சாலைகளான வதை முகாம்களில் அடிமைகள்போல அடைத்து வைக்கப்பட்டிருக்கும் ஈழத்தமிழர்களை  விடுவிக்க அண்ணாமலை இதுவரை என்ன முன்னெடுப்புகளை  எடுத்துள்ளார்? இந்த நாட்டிற்குச் சிறிதும் தொடர்பில்லாத திபெத்தியர்களுக்குக் கிடைக்கும் வசதி வாய்ப்புகளில் ஒன்றுகூட எம்தமிழ் மக்களுக்கு ஏன் வழங்கப்படவில்லை என்று அண்ணாமலை என்றைக்காவது குரல் கொடுத்ததுதான் உண்டா?

தமிழீழ தாயக விடுதலைக்கு ஆயுதமேந்திப் போராடிய மக்கள் ராணுவமான விடுதலைப் புலிகள் தங்கள் ஆயுதங்களை மௌனித்த பிறகும் இன்றுவரை இந்தியாவில் விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்காமல், நீட்டிப்பது ஏன்? இறுதிப் போருக்கு பிறகு குறைந்தப்பட்ச அரசியல் தீர்வையாவது இலங்கை அரசிடமிருந்து, மோடி அரசால் ஈழத்தமிழர்களுக்கு பெற்றுக்கொடுக்க முடிந்ததா?  தமிழ்நாட்டு மீனவர்கள் சிங்கள ராணுவத்தால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவதும், கொடூரமாக தாக்கப்படுவதும், சுட்டுக் கொல்லப்படுவதும்,  படகுகள் பறிக்கப்படுவதுமென  பெருங்கொடுமைகள் தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் இந்திய ஒன்றியத்தில் கடந்த பத்தாண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருக்கின்ற பாஜக தமிழ்நாட்டு  மீனவர்களை காக்கவும், மீனவர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வுகாணவும் இதுவரை ஏதாவது ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்ததுண்டா? தமிழர்களுக்கு சொந்தமான கட்சத்தீவை மீட்க பாஜக அரசிடம் அண்ணாமலை இதுவரை வலியுறுத்தியதுதான் உண்டா? 

இவற்றையெல்லாம் செய்யாமல் அண்ணாமலையின் இத்திடீர் பயணமும், தமிழர்களுக்கு ஆதரவாக இருப்போம், துணைநிற்போம் என்ற திடீர் கரிசனமும் அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலை மனதில் வைத்து தமிழர்களின் வாக்குகளைக் கவர்வதற்கான ஆதரவை திரட்டும்  சூழ்ச்சியேயாகும். 

ஆகவே, இவற்றையெல்லாம், நன்கு உணர்ந்து உலகத் தமிழினம் விழிப்புடன் இருக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறோம்.

"இலக்கு ஒன்றுதான் இனத்தின் விடுதலை!"

நாம்தமிழர் பிரித்தானியா

22.06.2023