மனித வாழ்வில் எத்தனையோ இழப்புகள் ஏற்படுகின்றன. அவற்றையெல்லாம் தாங்கிக் கொண்டு தாண்டி வருவதற்கு அளவற்ற மனவலிமை தேவைப்படுகிறது. என் வாழ்வில் இழப்புகளும் சோதனைகளும் நிறையும் தருணங்களில் எல்லாம் நான் கொண்டிருந்த ஒரே ஒரு நம்பிக்கை மூத்தவர் இருக்கிறார் என்பது மட்டும்தான்.
அந்த நம்பிக்கையை தான் நான் இழந்து விட்டு அமர்ந்திருக்கிறேன்.
எனது மூத்தவர் இல்லாத உலகில் இனி என்ன செய்வது எனப் புரியாமல் திசை காட்டியை இழந்த மாலுமிப் போல தவித்து இருக்கிறேன். தனித்திருக்கிறேன்.
நானும், மூத்தவரும், அண்ணனும் வெவ்வேறு கருப்பைகளில் கரு கொண்டாலும், இலட்சிய உறுதியில் ஒரே மனிதனாக உரு கொண்டவர்கள். என்னை நோக்கி வரும் சோதனை அம்புகளை எல்லாம் எதிர்கொண்டு கர்ணனின் கவசம் போல என்னை காத்து நின்றவர் அவர்தான்.
எனக்கு மட்டுமல்ல,என்னுயிர் அண்ணன் நம் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களுக்கும், நம் தேசியப் படையான விடுதலைப்புலிகள் அமைப்புக்கும் அவர் வழக்கறிஞர் மட்டுமல்ல, நம்பிக்கைகளின் இருப்பிடம். நம் மூத்தவரும் அப்படித்தான். நம் தேசியத் தலைவரின் தாய் தந்தையரான அம்மா பார்வதி அம்மாள் அப்பா வேலுப்பிள்ளை ஆகியோரை தமிழகத்தில் வைத்து பராமரித்து தன் தாய் தந்தையர் என பாதுகாத்தவர் அவர். கொடும் தடா சட்டத்தில் சிக்கிக்கொண்ட நம் சொந்தங்களை எல்லாம் மீட்டு வெறும் சந்திரசேகராக இருந்த நமது மூத்தவர் தடா சந்திரசேகராக மாறிய கதை நம் இனத்திற்கான விடுதலை வரலாற்று பக்கங்களில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டிருக்கின்றன.
வெறும் வழக்கறிஞர் மட்டுமல்ல, அவர் ஒரு தேர்ந்த ஆளுமை. எதிர் வருபவற்றை கணிக்கின்ற திறமை, கூர்ந்த சொற்கள், சட்டப் புலமையில் கொண்டிருந்த மேதமை, இன நலனின் மீது செலுத்திய மாசற்ற பேரன்பு என பன்முகத்தன்மையில் அவரைப் போல இனி யார் என்ற வினாவை நமக்குள் விதைத்து விட்டு மூத்தவர் விடைபெற்று சென்று விட்டார்.
தனிப்பட்ட முறையில் எனது மூத்த அண்ணனாக, என் குடும்பத்தின் தலைவனாக, நான் எடுக்கின்ற ஒவ்வொரு முடிவிலும் என்னை செதுக்கி என்னை செம்மைப்படுத்துவராக இருந்த எனது மூத்தவர் என்னை விட்டுப் போனது எதனாலும் என்னை மீட்க முடியாத கொடும் வேதனையில் தள்ளி இருக்கிறது.
எப்போதெல்லாம் தமிழர்கள் இன்னலுக்கு உள்ளாகின்றார்களோ அப்போதெல்லாம் உங்களுக்கு வழக்கு மன்றத்தில் வழக்காடவும், உங்களைக் காப்பாற்றவும் நான் இருக்கிறேன் என்ற மூத்தவர் தந்த உறுதியும் நம்பிக்கையும் இனி யார் தருவார்..??
ராஜீவ் கொலை வழக்கில் சிக்குண்டு தவித்த ஏழு தமிழர் விடுதலைக்காக தன் வாழ்வின் பெரும்பாலான பொழுதுகளை கழித்து அவர்களை காத்த நம் மூத்தவரின் இனப்பற்று கொண்ட ஆன்மா போல இனி எவருக்கு உள்ளம் வாய்க்கும்..??
நாம் தமிழர் என்கின்ற இனமான படையில் தன்னை முதன்மைத் தளபதியாக இணைத்துக் கொண்டு நாடெங்கிலும் இருக்கின்ற லட்சக்கணக்கான தம்பி தங்கைகளுக்கு மூத்தவராக மாறிப்போன அந்தக் கனிவும் அந்தக் கண்ணியமும் கொண்ட அன்பு இதயம் இனி யாருக்கு இருக்கும்..??
அவரைப் பற்றி நினைக்க நினைக்க உள்ளுக்குள் ஊறிக் கொண்டே இருக்கின்ற நினைவலைகளை எதை கொண்டு தடுப்பது என தெரியாமல் நான் தவிக்கிறேன். கண்ணின் இமை போல என்னைக் காத்தவர் தன் உடல் நலத்தைப் பாதுகாக்காமல் விட்டுவிட்டாரே என உள்ள வலியில் நோகுகிறேன்.
உலகம் முழுக்க வாழ்கின்ற தமிழ்த் தேசிய இனத்திற்கு நிகழ்ந்து விட்டிருக்கின்ற இந்த பேரிழப்பு எதனாலும் ஈடு செய்ய முடியாது.
என் மூத்தவரை இழந்து வாடுகின்ற எனது குடும்பத்தார் உற்றார் உறவினர் நாடெங்கிலும் இருக்கின்ற எனது தம்பி தங்கைகள் அனைவருக்கும் ஆறுதல் கூற வார்த்தைகள் இன்றி இருக்கிறேன்.
எந்த இன விடுதலை என்ற மகத்தான இலக்கிற்காக அவர் நமக்கு மூத்தவராக மாறி முன் நின்றாரோ அந்த மகத்தான லட்சியங்களை வென்றெடுக்க நம் உயிருள்ளவரை உழைப்போம் என உறுதி ஏற்பது தான் நாம் நம் மூத்தவர் மீது கொண்டிருக்கின்ற அளவற்ற பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் செய்கின்ற தகுதி.
அவரது ஆன்மா நம்மை எப்போதும் வழிநடத்தும். அவரது மூச்சுக்காற்று நம் லட்சியப் பாதையில் நம் துயர் அகற்றும்.
நாம் தமிழர் கட்சியின் பொதுச் செயலாளர் என்னுயிர் அண்ணன் என் மூத்தவர் தடா சந்திரசேகர் அவர்களுக்கு எனது கண்ணீர் வணக்கத்தை செலுத்தி அவர் கொண்டிருந்த கனவுகளை அவரது உடன் பிறந்தவன் என்கின்ற முறையில் உறுதியாக நிறைவேற்றுவேன் என உறுதி அளிக்கிறேன்.
மூத்தவருக்கு தமிழ் தேசிய இனத்தின் சார்பாக எனது புகழ் வணக்கம்!
செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி