தேர்தல் அறிக்கையில் அளித்த பணிநிரந்தர வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது கொடுங்கோன்மையாகும்! – சீமான் வலியுறுத்தல்
தொகுப்பூதியத்தில் பணியமர்த்தப்பட்ட செவிலியர்களை உறுதியளித்தபடி பணி நிரந்தரம் செய்யாமலும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றாமலும் தமிழ்நாடு அரசு காலம் கடத்தி வருவது வன்மையான கண்டனத்திற்குரியது. பேரிடர் காலத்தில் தங்கள் உயிரையும் பொருட்படுத்தாது தன்னலமற்று சேவையாற்றிய செவிலியர்களின் உழைப்பினை உறிஞ்சிவிட்டு, உரிமையை தர மறுப்பதோடு, வீதியில் இறங்கிப் போராடும் செவிலியர்களை திமுக அரசு காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது சிறிதும் இரக்கமற்ற கொடுங்கோன்மையாகும்
தமிழ்நாடு மருத்துவப் பணிகள் தேர்வாணையத்தின் மூலம் பணி நிரந்தர உறுதிமொழியுடன் கொரோனா நோய்த்தொற்றுப் பேரிடர் காலத்தில் ஏறத்தாழ 4000 செவிலியர்கள் பெருந்தொற்றுத் தடுப்புப் பணிகளுக்காக முந்தைய அதிமுக அரசால் ஒப்பந்த அடிப்படையில் நியமிக்கப்பட்டனர். இரவு-பகல் பாராது மக்களின் இன்னுயிர் காக்கும் அரும்பணியில் அயராது ஈடுபட்டு வந்த செவிலியர்கள், அரசு உறுதியளித்தபடி தங்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டி கடந்த மூன்று ஆண்டிற்கும் மேலாகப் போராடி வருகின்றனர்.
ஒப்பந்த செவிலியர்களைப் பணி நிரந்தரம் செய்யாததோடு, அரசுப் பணியாளர்களுக்கான எவ்வித உரிமையோ, சலுகையோ வழங்காமல் மிகக்குறைந்த ஊதியமாக மாதம் ரூபாய் 7,700 மட்டுமே வழங்கி கொத்தடிமை போல் நடத்தியது அன்றைய அதிமுக அரசு. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒப்பந்த செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள் என்று உறுதியளித்து அதிகாரத்தை அடைந்த திமுக அரசு ஆட்சிப்பொறுப்பேற்று கடந்த இரண்டரை ஆண்டுகளாகியும் பணிநிரந்தரம் செய்யாமல் ஏமாற்றியதோடு, ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற மறுப்பது அப்பட்டமான தொழிலாளர் விரோதப்போக்காகும்.
தமிழ்நாட்டில் தற்போது புதிதாக 11 மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்பட்டுள்ளது. ஏற்கனவே உள்ள மருத்துவக் கல்லூரிகளும் அதிக நோயாளிகளைப் பராமரிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டு நோயாளிகளுக்கான படுக்கை இடங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளன. ஆனால், அதற்கேற்றவாறு மருத்துவர் மற்றும் செவிலியர் பணியிடங்கள் அதிகரிக்கப்படாமலும், காலியாக உள்ள பணியிடங்கள் நிரப்பப்படாமலும் இருப்பதால் நோயாளிகள் உரிய நேரத்தில் மருத்துவம் கிடைக்கப்பெறாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். மேலும், மிக அதிகமான பணிச்சுமையினால் செவிலியர்களும் உடல் மற்றும் மனச்சோர்வுக்கு ஆளாவதால் நோயாளிகளைச் சரிவரக் கவனிக்க முடியாத நிலைக்குத் தள்ளப்படுகின்றனர்.
இதனால் நோயாளிகளின் உயிருக்கே ஆபத்தான சூழலும் ஏற்படுகிறது. அரசு மருத்துவமனைகளில் அதிகளவில் செவிலியர்களது சேவை தேவைப்படும் நிலையில், ஆட்சிக்கு வந்தால் தொகுப்பூதிய செவிலியர்களைப் பணிநிரந்தரம் செய்வோம், காலிப்பணியிடங்களை நிரப்புவோம் என்று தனது தேர்தல் அறிக்கையில் (எண்:356) உறுதியளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல், போராடும் செவிலியர்களை காவல்துறை மூலம் அடக்கி ஒடுக்குவது எவ்வகையில் நியாயமாகும்? இதற்குப் பெயர்தான் எல்லோருக்கும் எல்லாம் கிடைக்கச் செய்கின்ற திராவிட மாடலா? என்ற கேள்வியும் எழுகிறது.
ஆகவே, தமிழ்நாடு அரசு ஒப்பந்த செவிலியர்களை உடனடியாகப் பணிநிரந்தரம் செய்வதோடு, காலியாகவுள்ள செவிலியர் பணியிடங்களை உடனடியாக நிரப்புதல், தேவைக்கேற்ப புதிய பணியிடங்களை உருவாக்குதல், ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு, வெளிப்படையான பணியிடமாற்ற கலந்தாய்வு, வரையறுக்கப்பட்ட பணி நேரத்தை உறுதி செய்தல், தேவையற்ற பணிச்சுமையைத் திணிப்பதைத் தவிர்த்தல், உயர்த்தப்பட்ட ஊதியத்தை அனைத்து செவிலியர்களுக்கும் வழங்குதல், கொரானா காலத்தில் பணி நீக்கம் செய்யப்பட்ட செவிலியர்களை மீண்டும் பணியில் சேர்த்தல் உள்ளிட்ட செவிலியர்களின் மிக நியாயமான கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி ஏழை மக்களுக்கான மருத்துவச் சேவை தடைபடாமல் தொடர வழிவகைச் செய்ய வேண்டுமெனவும், அவர்கள் மீதான அடக்குமுறைகளைக் கைவிட வேண்டுமெனவும் நாம் தமிழர் கட்சி சார்பாக வலியுறுத்துகிறேன்.
போற்றுதலுக்குரிய செவிலியர்கள் தங்களின் வாழ்வாதார உரிமைக்காக முன்னெடுக்கும் அறப்போராட்டத்திற்கு நாம் தமிழர் கட்சி தனது முழுமையான ஆதரவினை வழங்கி, கோரிக்கைகள் வெல்லும்வரை துணை நிற்குமென்றும் உறுதியளிக்கிறேன்.
https://x.com/Seeman4TN/status/1711664993475711357?s=20
– செந்தமிழன் சீமான்
தலைமை ஒருங்கிணைப்பாளர்
நாம் தமிழர் கட்சி